இன்னும் ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களில் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடச் செல்லும் நோக்கில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் வெளியூர் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையங்களில் விமான டிக்கெட் கட்டணங்கள் திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளன. சில வழித்தடங்களில் 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு ரயில்வே துறை மற்றும் மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், நீண்ட நேரப் பயணத்தைத் தவிர்க்கும் பொருட்டு, பலர் விரைவாக சென்றடைய விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுகின்றனர்.
நாளை தொடங்கும் தொடர் விடுமுறைகளை முன்னிட்டு, இன்று முதல் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பெரும் திரள் காணப்படுகிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளி மாநில விமானங்களின் கட்டணங்கள் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னை–சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துள்ளன.
பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியிருந்தும், விமான நிறுவனங்கள் அந்த உத்தரவை மீறி கட்டணங்களை அதிகரித்துள்ளன என்ற புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்த்து கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
