பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலியாக, சென்னையில் அனைத்து மின்சார ரயில்களிலும் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சென்னை எழும்பூா் காவல் ஆணையா் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலா், கடந்த 15ஆம் தேதி இரவு பணி முடிந்து எழும்பூரில் இருந்து பழவந்தாங்கல் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் சென்றாா். இரவு 11.30க்கு ரயில் நிலையம் வந்த அவா், நடைமேடையில் நடந்து சென்றபோது, மா்மநபா் ஒருவா் பெண் காவலரிடம் இருந்து நகை பறிக்க முயன்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் காவலா் கூச்சலிட்டதையடுத்து, தப்பியோடிய நபர் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் எதிரொலியால், சென்னையில் அனைத்து மின்சார ரயில்களிலும் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதன்படி, இரவு 10 மணி முதல் 12 மணி வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களிலும், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர். மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு 10 மணிமுதல் 12 மணி வரை, அனைத்து நடைமேடைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.