Friday, December 12, 2025

இந்தியாவில் நுழைந்த ‘ஒயிட் காலர் பயங்கரவாத’ நெட்வொர்க்! காரணத்தை கேட்டா ஷாக்கிங்-ஆ இருக்கே!

செங்கோட்டை அருகே கடந்த வாரம் வெடித்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் இன்னும் நம் நினைவில் உள்ள சம்பவமாகும். இதையடுத்து, ஜம்மு–காஷ்மீர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட இரண்டாவது வெடிப்பு, மேலும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் ஆகியவை, நாட்டுக்குள் செயல்படும் புதிய வகை பயங்கரவாத நெட்வொர்க்கை பாதுகாப்பு அமைப்புகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டு ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள், இந்தியாவின் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப அமைப்புகளுக்குள் ஊடுருவி செயல்படும் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாத குழுக்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை குறிக்கிறது. இந்த நெட்வொர்க்கில் ஈடுபட்டவர்கள், நாட்டின் முக்கிய நகரங்கள், நிறுவனங்கள் மற்றும் முக்கிய அமைப்புகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆய்வு செய்து வரும் பாதுகாப்பு நிபுணர் மேஜர் ஜெனரல் சுதாகர் ஜீ, இந்தியா தற்போது ‘ஹைபிரிட் பயங்கரவாத’ அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாக எச்சரிக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் வெளிநாட்டு சதித் திட்டங்கள் இணைந்திருப்பதே இந்த புதிய முறைமையின் ஆபத்தை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகள் பாகிஸ்தான், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் இத்தகைய நெட்வொர்க்குகளை உருவாக்க தீவிர முயற்சியில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். குறிப்பாக, வங்கதேச எல்லையை ஒட்டிய மேற்கு வங்கம் முதலிலேயே இதனால் பாதிக்கப்படக்கூடிய மாநிலமாக இருக்கலாம் எனவும், அங்குள்ள நினைவுச்சின்னங்கள் மற்றும் தலைசிறந்த நிறுவனங்கள் தாக்குதல் இலக்காக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

இந்தியா மீது நடத்தப்படவுள்ள எதிர்காலத் தாக்குதல்கள் பாரம்பரிய பயங்கரவாத வடிவில் இருக்காது என்றும், நாட்டின் வளர்ச்சி பாதையை தடுக்கும் நோக்கில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மக்கள்தொகை சார்ந்த முக்கிய துறைகள் குறிவைக்கப்படலாம் என்றும் மேஜர் ஜெனரல் சுதாகர் ஜீ எச்சரித்துள்ளார்.

Related News

Latest News