காஞ்சிபுரம் நகரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிவுரும் தருவாயில் உள்ள ஜவஹர்லால் நேரு மார்க்கெட், மக்கள் பயன்பாட்டுக்கே வராத நிலையில் , முதல் தளத்தில் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி.
பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே இந்த கட்டடத்தின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் பல ஆண்டு காலமாக இயங்கி வந்த ஜவஹர்லால் நேரு மார்க்கெட் முற்றிலும் சிதிலம் அடைந்து , மழை நீர் தேங்கியதால் அதை இடித்து விட்டு புதிதாகக் கட்டடம் கட்ட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழக அரசு 4.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மார்ச் மாதம் புதிய கட்டட பணிகள் துவங்கியது.
ஓராண்டில் முடிக்க திட்டமிட்ட நேரு மார்க்கெட் பணி, இரு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் கட்டுமான பணி முடிக்கப்பட்டு புதிய நேரு மார்க்கெட் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் இந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் முன்புறம் உள்ள தொங்கட்டான் திடீரென உடைந்து கீழே விழுந்துள்ளது.
மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னதாகவே ஜவஹர்லால் நேரு பெயரில் உள்ள இந்த புதிய கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அல்லது நாளடைவில் கட்டிடத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்படும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.