தங்கம் வாங்குவோருக்கு அதிரடி எச்சரிக்கை! 3 மாதத்தில் நடக்கப்போகும் சம்பவவம்?

தமிழக இல்லத்தரசிகளுக்கும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் ஒரு மிக முக்கியமான அதே சமயம் சற்றே அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஈரான் போர் பதற்றம் காரணமாகத் தங்கத்தின் விலை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

ஆனால், இந்த விலைச் சரிவு என்பது ஒரு தற்காலிகமான விஷயம் தான் என்றும், இன்னும் மூன்று மாதங்களில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொடப்போகிறது என்றும் முன்னணி நிதி நிறுவனமான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்(standard chartered) தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது. தங்கம் வாங்குவதற்கு இதுவே உங்களுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கலாம் என்ற ஒரு சூழல்தான் இப்போது நிலவி வருகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டதை நாம் பார்த்தோம். ஆனால், தற்போது போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்றே குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது பலரையும் தங்கம் விலை இன்னும் குறையும் என எதிர்பார்க்க வைத்தாலும், உண்மை நிலைமை அதற்கு நேர் எதிராக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கணிப்புப்படி, அடுத்த மூன்று மாதங்களில், அதாவது செப்டம்பர் மாதத்திற்குள் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,200 டாலர் என்ற நிலையை எட்டும். இதனை இந்திய ரூபாயில் கணக்கிட்டால், செப்டம்பரில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் என்ற புதிய மைல்கல்லைத் தொடும் எனக் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த விலை உயர்வு அத்தோடு நின்றுவிடப் போவதில்லை. அடுத்த 12 மாதங்களில், அதாவது 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,500 டாலரைத் தாண்டும் என்றும், அப்போது இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் கையிருப்பிற்காகத் தங்கத்தை அள்ளிக்குவித்து வருவதுதான், இந்த விலை உயர்வுக்கு ஒரு மிக முக்கியமான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தங்கம் விலை குறையட்டும் என்று காத்துக்கொண்டிருக்காமல், விலை சரிவில் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுகச் சிறுகச் சேமிப்பதுதான் புத்திசாலித்தனம் என்பது நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.

குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக் கண்டு பயப்படாமல், தங்கத்தை எப்போதும் ஒரு நீண்ட கால முதலீடாகப் பார்க்க வேண்டும். சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் அரசியல் மாற்றங்களால் தங்கத்தின் மவுசு ஒருபோதும் குறையாது என்பதைத்தான் இந்த ஆய்வு அறிக்கைகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

உங்கள் முதலீட்டுப் பட்டியலில் எப்போதும் தங்கத்திற்கு ஒரு இடத்தைத் தருவது உங்கள் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக அமையும். அதே சமயம், எந்தவொரு பெரிய முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

Related News

Latest News