பெங்களூர் இந்தியாவின் முக்கியமான ஐடி நகரமாக விளங்குகிறது. வேலை, வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரத்திற்கு வருவதால், பெங்களூரில் வாடகை வீடுகளுக்கான தேவை எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூரில் வாடகை வீடு தேடும் போது ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று, ரெட்டிட் வலைதளத்தில் வெளியான பதிவின் மூலம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வேலைக்காக பெங்களூருக்கு வந்த ஒரு இளைஞர், தனது வீடு தேடும் அனுபவத்தில் சந்தித்த விசித்திரமான சம்பவத்தை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாடகை வீடு தேடி சென்ற போது, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வெளியில் இருந்த பாதுகாவலரிடம் வீடு காலியாக உள்ளதா என கேட்டுள்ளார். அதற்கு பாதுகாவலர், ஒரு யூனிட் காலியாக இருப்பதாக கூறி, அதன் உரிமையாளரின் தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளார்.
பின்னர் அந்த இளைஞர், வீட்டின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வீட்டை பாதுகாவலர் தான் காட்டுவார் என உரிமையாளர் தெரிவித்துள்ளார். வீட்டை பார்க்க பாதுகாவலரிடம் கேட்டபோது தான் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. வீட்டை திறந்து காட்டுவதற்கு ஒரு மாத வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என பாதுகாவலர் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டை காட்டுவதற்கே பணம் கேட்பது புதிய வியாபாரமா அல்லது புதிய வகை ஏமாற்று முறையா என்ற குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் வாடகை வீடு தேடும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவுக்கு பதிலளித்த பலரும், தாங்களும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாதுகாவலர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் வாடகை வீடு தேடும் போது ஏற்படும் சிக்கல்கள் பெங்களூரில் அதிகரித்து வருவதாகவும் பலர் கூறி வருகின்றனர்.
