இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிகிறது. இதற்கிடையே காஸா முழுவதையும் ஆக்கிரமித்து இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலின் முக்கிய அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தால் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ராணுவம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த முயற்சிக்கு பொது அரங்கில் கடுமையான எதிர்ப்பலை எழுந்துள்ளதாக தெரிகிறது. மேலும் காஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு முன்னதாகவே சர்வதேச அளவில் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உள்நாட்டிலும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் தலைநகர் டெல் அவிவ் வீதிகளில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களில், அங்கு மீதமுள்ள 50 பேரையும் மீட்டுக்கொண்டுவர போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைமைக்கு இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையால் நடைபெற்ற முன்னேற்றங்களால் ஹமாஸ் பல பிணைக்கைதிகள் ஏற்கெனவே விடுவித்திருப்பது கவனிக்கப்படத்தக்கது.