வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கி, தனது MCLR அதாவது Marginal Cost of Funds-based Lending Rate விகிதங்களில் சில தவணைகளுக்கான வட்டியை அதிகபட்சம் 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
வங்கிகள் வழங்கும் பெரும்பாலான கடன்கள் MCLR அடிப்படையில்தான் இருக்கும்.
MCLR குறைந்தாலே, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கடன்களின் வட்டி விகிதமும் தானாகக் குறையும். இதனால் கடனாளர்களின் மாத தவணை அதாவது EMI சுமையும் குறையும். தற்போது HDFC வங்கியின் MCLR விகிதம் 8.40% முதல் 8.65% வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 8.55% முதல் 8.75% வரை இருந்தது. குறிப்பாக, மூன்று மாதக் கடன்களுக்கு 15 அடிப்படை புள்ளிகள் குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.
MCLR என்பது ஒரு நிதி நிறுவனம் வழங்கும் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆகும். இதனை இந்திய ரிசர்வ் வங்கி 2016-ல் அறிமுகப்படுத்தியது. இது கடன் வட்டிக்கு ஒரு அடித்தளமாகச் செயல்படுகிறது. பெரும்பாலான வீட்டு கடன்கள் மற்றும் சில தனிநபர் கடன்கள் MCLR-இல் இணைக்கப்பட்டிருப்பதால், இவ்விகிதம் குறையும்போது கடனாளர்களுக்கு நேரடியாக நன்மை கிடைக்கும். ஆனால் தற்போது HDFC வங்கியின் பெரும்பாலான வீட்டு கடன்கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த மாற்றம் முக்கியமாக MCLR அடிப்படையில் உள்ள கடனாளர்களுக்கே பலனளிக்கும். வாடிக்கையாளர்கள் அதிகாரபூர்வமான மற்றும் துல்லியமான தகவல்களுக்கு HDFC வங்கி வலைத்தளத்தைப் பார்க்கவும்.