உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான BCCI வீரர்களை நடத்தும் முறை சரியில்லை என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. 2023 உலகக்கோப்பைக்கு பிறகு ஷ்ரேயஸ் அய்யரை BCCI ஓரங்கட்டியது. நல்ல பார்மில் இருந்த அவரை காண்டராக்ட் லிஸ்டில் சேர்க்கவில்லை.
ஆனால் மீண்டும் கம்பேக் கொடுத்த ஸ்ரேயஸ், இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். தற்போது IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக, அந்த அணியை வழிநடத்த உள்ளார்.
இந்தநிலையில் ஷ்ரேயஸ் போல மற்றொரு இளம்வீரர் இஷான் கிஷன் வாழ்க்கையிலும், BCCI விளையாடுவதாக Ex வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், ”இஷான் கிஷன் சிறந்த வீரர். ஒருமுறை தவறு செய்துவிட்டார். அதற்காக, அவரை ஒரேயடியாக ஓரங்கட்டுவது சரி கிடையாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அனைவரும் தவறு செய்யக் கூடியவர்கள்தான்.
இஷான் இளம் வீரர். தெரியாமல் ஒரு தவறு செய்துவிட்டார். அதற்காக, அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்க கூடாது. அவர், இரட்டை சதம் அடித்திருக்கிறார். IPL 18ஆவது சீசனில் அதிரடி காட்டினால், அவருக்கு இந்திய அணியில் ரெகுலராக இடம் கொடுக்க வேண்டும்,” என BCCIக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
2023ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20, டெஸ்ட் தொடர்களை விளையாண்டது. T20 தொடரில் இஷானுக்கு பதில் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் டெஸ்ட் தொடரிலும் இஷானை புறக்கணித்து, ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதனால் கடுப்பான இஷான் கிஷன் தொடரை புறக்கணித்து நாடு திரும்பினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடும்படி BCCI அவரைக் கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கு செவி சாய்க்காமல் IPL பயிற்சியை மேற்கொண்டு ‘கெத்து’ காட்டினார். இதனால் இஷானுக்கு இந்திய அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடப்பு IPL சீசனில் அவரை ஹைதராபாத் அணி, ரூபாய் 11 கோடியே 25 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. மும்பையில் ஓபனராக இஷான் இருந்தார். இங்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என 2 தலைசிறந்த ஓப்பனர்கள் இருக்கின்றனர். எனவே இஷானுக்கு ஒன் டவுனில் தான் இறங்கிட இடம் கிடைக்கும்.
இந்த நெருக்கடிகளை சமாளித்து இஷான் அதிரடி காட்டும் பட்சத்தில், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது முதல்தர போட்டிகளுக்கு கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகிய மூவரை மட்டுமே, BCCI விக்கெட் கீப்பர்களாகப் பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.