திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதியில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் தொடர்ந்து கடித்து வருகிறது. அங்கு ஒரே இரவில் 16 பேரை வெறி நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. விடிய விடிய மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வெறி நாய் கடித்த தர்மலிங்கம் தெருவை சேர்ந்த பூக்கடை வியாபாரி த.நாகராஜ்(56), தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தவறியதாகக் கூறி நகராட்சி அலுவலக வாயிலின் குறுக்கே தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துகணேஷ், காவல் உதவி ஆய்வாளர் பெரியமணி தலைமையிலான போலீஸார், நாகராஜை சமரசம் செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே இரவில் 16 பேர் வெறி நாயால் கடிப்பட்ட சம்பவம் மணப்பாறையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.