சத்தீஸ்கர் மாநிலம் சிந்த்காலோ என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆனந்த் யாதவ். 35 வயதான அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. மந்திர, தந்திரங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்ட ஆனந்த் யாதவ் பல்வேறு பரிகாரங்களை செய்துள்ளார்.
அப்போது உயிருடன் உள்ள கோழிக்குஞ்சை விழுங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உள்ளூரில் உள்ள ஜோசியர் ஒருவர் கூறியதை நம்பி கோழிக்குஞ்சு ஒன்றை உயிருடன் விழுங்கி உள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவரது தொண்டையில் கோழிகுஞ்சு உயிருடன் இருப்பதை பார்த்து அதனை மீட்டனர்.
இது குறித்து உடற்கூராய்வு செய்த மருத்துவர் சாந்து பாக் கூறியதாவது; எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை. உயிரிழந்த ஆனந்த் யாதவ் தொண்டையில் 20 செ.மீ., நீளமுள்ள கோழிக்குஞ்சை எடுத்தேன். இந்த கோழிக்குஞ்சு இப்போது உயிருடன் இருக்கிறது. இதுவரை 15,000க்கும் மேற்பட்ட உடற்கூராய்வு செய்த நான் இதுபோன்ற ஒரு அனுபவத்தை கண்டதில்லை என அவர் கூறியுள்ளார்.