ஒருவர் ஆறு மாதங்களாக செல்போனை வயிற்றுக்குள் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விழுங்கி விட்டார். அவர் என்ன காரணத்திற்காக செல்போனை விழுங்கினார் என்று தெரியவில்லை.
மருத்துவமனை செல்வதற்கு தயங்கிய அந்த நபர், செல்போன் அதுவாகவே வெளியேறி விடும் என நம்பினார். ஆனால் அந்த செல்போன் உணவு செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தியது.
நாளுக்கு நாள் சிக்கல் அதிகமாகி கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனையடுத்து எகிப்தின் அஸ்வான் நகரில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரின் வயிற்றுக்குள் முழுமையான செல்போன் ஒன்று கிடந்தது. மேலும், அவரின் குடல் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் வயிற்றிலிருந்த செல்போனை மருத்துவர்கள் அகற்றினர். விரைவில் அந்த நபர் முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் செல்போனை விழுங்கிய நபர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேபோல் கடந்த மாதம் கொசோவோவின் பிரிஸ்டினாவைச் சேர்ந்த ஒருவர் செல்போனை விழுங்கினார். மருத்துவர்கள் அவரின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்தபோது, மூன்று பகுதிகளாக செல்போன் பிரிந்து காணப்பட்டது.
பின்னர் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வயிற்றிலிருந்த செல்போன் அகற்றப்பட்டது. இந்த நிலையில் எகிப்தைச் சேர்ந்த ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.