அமெரிக்காவிற்கு ‘ஹார்ட் அட்டாக்’ கொடுக்கும் புதிய ஆயுதம்! ஈரான் பகிரங்க மிரட்டல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல், தற்போது மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் நீரிணையைத் திறந்து விடுவதற்கு ஈரானியத் தரப்பு முன்வைத்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த தெளிவான முடிவு எட்டப்படாத வரை, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார்.

“குண்டுவீசித் தாக்குவதை விட, கடல் முற்றுகைதான் ஈரானுக்குப் பெரிய பாடத்தைக் கொடுக்கும்” என்று டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். தனது அணு ஆயுதக் கனவை ஈரான் கைவிடாதவரை, இந்த முற்றுகை தொடரும் என்பது அமெரிக்காவின் திட்டவட்டமான பதில். இந்த இராஜதந்திரப் பின்னடைவை அடுத்து, ஈரான் தரப்பு மிகவும் ஆக்ரோஷமான மிரட்டலை விடுத்துள்ளது. ஈரானியக் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி(Shahram Irani), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளை நேரடியாக எச்சரித்துள்ளார்.

“எதிரி நாட்டுப் படைகளை அச்சுறுத்த, அவர்கள் ‘ஆழ்ந்த பயம்’ கொள்ளக்கூடிய ஒரு புதிய ஆயுதத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். அது அவர்களை ‘இதயத் துடிப்பை நிறுத்தச் செய்யும்’ (Heart attack) அளவுக்குப் பயங்கரமானது” என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆயுதம் அமெரிக்கப் படைகளுக்கு மிக அருகிலேயே இருப்பதாகவும் அவர் எச்சரித்திருப்பது, மத்திய கிழக்குக் கடல் பகுதியில் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

ஈரான் தரப்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானந்தாங்கி கப்பலான ‘ஆபிரகாம் லிங்கன்’ மீது தாங்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் கடற்படைத் தளபதி உரிமை கோரியுள்ளார். அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராக நடத்திய போரில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தாங்கள் வெற்றிகரமாக நடத்தியிருப்பதாகவும், இதன் மூலம் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைச் செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் கடல் முற்றுகையை “கடற்கொள்ளை” என்று சாடியுள்ள ஈரான், ஈரானியக் கப்பல்கள் மற்றும் பணியாளர்களை அமெரிக்கா பிணையக் கைதிகளாக வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியைத் தற்போது முழுவதுமாக ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும், அமெரிக்கப் படைகள் இன்னும் நெருங்கி வந்தால், எந்தத் தயக்கமும் இன்றி ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா தனது முற்றுகையைத் தீவிரப்படுத்த, ஈரான் தனது புதிய ரகசிய ஆயுதங்களைப் பற்றிய மிரட்டலை வீசியிருப்பது, இந்தப் போர் எதை நோக்கிச் செல்லப் போகிறது என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை என்ற கதவு மூடப்பட்ட நிலையில், மோதல் வெடிக்குமா அல்லது இராஜதந்திர வழியில் தீர்வு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News