செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்திய ரயில்வே, ஜோத்பூர் – டெல்லி மற்றும் பிகானேர் – டெல்லி இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ஜோத்பூர் – டெல்லி வந்தே பாரத் ரயில், காலை 5.25 மணிக்கு ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு டெல்லி கண்டோன்மென்ட் நிலையத்தை அடையும். திரும்பும் பயணம் மாலை 3.10 மணிக்கு டெல்லியில் இருந்து தொடங்கி இரவு 11.20 மணிக்கு ஜோத்பூரை சென்றடையும். இந்த ரயில், வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற ஆறு நாட்கள் இயக்கப்படும். வழித்தடத்தில் ராஜஸ்தானில் உள்ள மேர்தா ரோடு, தேகனா, மக்ரானா, புலேரா, ஜெய்ப்பூர், ஆல்வர் நிலையங்களிலும், ஹரியானாவில் உள்ள ரேவாரி மற்றும் குர்கான் நிலையங்களிலும் நின்று செல்லும்.
பிகானேர் – டெல்லி வந்தே பாரத் ரயில், காலை 5.40 மணிக்கு பிகானேரில் இருந்து புறப்பட்டு காலை 11.05 மணிக்கு டெல்லி கண்டோன்மென்ட் நிலையத்தை அடையும். திரும்பும் பயணம் மாலை 4.45 மணிக்கு டெல்லியில் இருந்து தொடங்கி இரவு 11.05 மணிக்கு பிகானேரை சென்றடையும். இந்த ரயில், ராஜஸ்தானில் உள்ள ரத்தன்கர், சுரு, சத்தில்பூர் நிலையங்களிலும், ஹரியானாவில் உள்ள லோஹாரு, மகேந்திரகர், ரேவாரி, குர்கான் நிலையங்களிலும் நின்று செல்லும்.
இந்த இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள், ராஜஸ்தானின் முக்கிய நகரங்களை டெல்லியுடன் மற்றும் அத்துடன் பிற மாநிலங்களுடன் இணைத்து, பயணிகளின் நேரத்தைக் குறைக்கும் வகையில் பெரும் பலனளிக்கின்றன.
