பொதுமக்களை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் : நாங்குநேரியில் நடந்த பயங்கர சம்பவம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தின் இந்திரா காலனியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அங்கு ஒரு தேநீர் கடை முன்பு சிலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஒன்பது பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் அங்கு வந்து திடீரென பெட்ரோல் குண்டு வீசியது. பின்னர் சாலையில் கண்ணில் பட்டவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

அதன் பின்னர் அந்த மர்மகும்பல் அருகிலுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்திற்கும் சென்று அங்கிருந்த சிலரையும் தாக்கி காயப்படுத்தினர். மேலும் அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.

இந்த திடீர் தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான் மார்க் (45) மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது கூலி தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த தாக்குதலில் பெரும்பத்தைச் சேர்ந்த நெல்சன் (45), பிரபாகரன், ராமசாமி, வீராங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (58), புளியங்குளத்தைச் சேர்ந்த சசிகுமார் ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.

தகவல் அறிந்த நாங்குநேரி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இருவரின் உடல்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நெல்சன் மற்றும் கணேசன் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற காயமடைந்தவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி சரக துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் கஞ்சா மற்றும் மதுபோதையில் நடந்ததா அல்லது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தென்மண்டல காவல் மேலாளர் விஜயேந்திர பிதாரி திருநெல்வேலிக்கு வந்து நள்ளிரவில் பெரும்பத்து பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

தப்பிச் சென்ற மர்மகும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்து அனுப்பினர்.

இந்த கொடூர சம்பவத்தால் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பெரும்பத்து பகுதியில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்துடன் தென்காசி மாவட்டத்திலிருந்தும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நாங்குநேரியில் இருந்து மஞ்சங்குளம், பெரும்பத்து வழியாக ஏர்வாடி செல்லும் பொது போக்குவரத்து நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாகவும் அந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் பிடிக்கப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News