சர்வதேச அரசியலில் சில நேரங்களில் மிகவும் வினோதமான சம்பவங்கள் நடப்பதுண்டு. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில், தாய்லாந்தில் உள்ள ஒரு குரங்கு அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத் திட்டத்தில் ஒரு சிறிய தடையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நோக்கில் புறப்பட்ட அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் சீப்’ (USS Chief) போர்க்கப்பல், தாய்லாந்தின் புக்கெட் நகரில் ஒரு சிறிய இடைவேளைக்காக நின்றது.
அப்போது அங்குள்ள ஒரு குரங்கு, அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர் ஒருவரைத் திடீரென நகத்தால் கீறியுள்ளது. வெறும் கீறல்தானே என்று நாம் நினைக்கலாம், ஆனால் அமெரிக்க ராணுவம் இதை ஒரு மிகப்பெரிய மருத்துவ அவசர நிலையாகக் கருதியது. ஏனென்றால், புக்கெட்டில் உள்ள குரங்குகள் ‘ஹெர்பெஸ் பி’ (Herpes B) என்ற உயிருக்கே ஆபத்தான வைரஸை சுமந்து செல்பவை. இதனால் அந்த வீரர் உடனடியாக ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்குச் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
“எதிர்பாராத அதிசயங்கள் நடக்கும்” என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைக் கிண்டலாகக் குறிப்பிட்டாலும், இது ஒரு முக்கியமான ராணுவ வீரரைத் தற்காலிகமாகப் பணியிலிருந்து விலக்கி வைத்துள்ளது. இந்தச் சம்பவம் ஒருபுறம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தின் தீவிரத்தை நாம் கவனிக்க வேண்டும்.
ஈரானியச் சிறிய படகுகள் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அத்தகைய படகுகளைக் கண்டதும் “சுட்டுத் தள்ளுங்கள்” (Shoot and Kill) என்று ஏற்கனவே அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது.
பிப்ரவரி 28 முதல் ஈரான் இந்தப் பாதையை முடக்கி வைத்துள்ளதால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தத் தடையை நீக்க அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் சீப்’ மற்றும் ‘யுஎஸ்எஸ் பயோனீர்’ ஆகிய போர்க்கப்பல்கள் தற்போது தீவிரமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒரு குரங்கால் ஒரு வீரர் காயமடைந்த போதிலும், அமெரிக்காவின் இந்த ‘மிஷன்’ தடைபடாமல் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இயற்கையின் ஒரு சிறிய சீற்றம், உலகின் மிக நவீன ராணுவத் திட்டத்தையே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பதுதான் இதிலுள்ள மிகப்பெரிய ஆச்சரியம்.
