நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் வீட்டு பட்ஜெட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, அதாவது சுமார் 43 மாதங்களாக மாற்றமில்லாமல் இருந்த வட்டி விகிதத்தை, இப்போது 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
இதன் விளைவாக, வங்கிகளுக்கான ரெப்போ ரேட் 5.25 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, கடன் வாங்கியவர்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கப்போகிறது.
குறிப்பாக, ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு இந்தத் தாக்கம் உடனடியாகத் தெரியும். ஒரு உதாரணத்திற்குப் பார்த்தால், நீங்கள் 36 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இதுவரை 8 சதவீத வட்டி விகிதத்தில் நீங்கள் மாதம் 30,513 ரூபாய் தவணையாகச் செலுத்தி வந்திருப்பீர்கள். ஆனால், இப்போது வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்ந்துள்ளதால், இனி உங்கள் மாதத் தவணை 31,079 ரூபாயாக அதிகரிக்கும்.
அதாவது, ஒவ்வொரு மாதமும் நீங்கள் கூடுதலாக 566 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஒரு சிறிய தொகையாகத் தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் உங்கள் சேமிப்பில் ஒரு பெரும் ஓட்டையை ஏற்படுத்தும்.
இங்கே கடன் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. வட்டி விகிதம் உயர்ந்தவுடன் பெரும்பாலான வங்கிகள் உங்கள் அனுமதியின்றி லோன் கட்டும் காலத்தை, அதாவது டென்யூர் காலத்தை நீட்டித்துவிடும்.
அப்படி நீட்டிக்கப்படும்போது நீங்கள் பல லட்சம் ரூபாய் வட்டியாக மட்டுமே கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். இதிலிருந்து தப்பிக்க, நீங்கள் உடனடியாக உங்கள் வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு அல்லது மின்னஞ்சல் வாயிலாக, “எனது லோன் காலத்தை நீட்டிக்க வேண்டாம், அதற்குப் பதிலாக எனது மாதத் தவணைத் தொகையை அல்லது இஎம்ஐ-யை உயர்த்திக் கொள்கிறேன்” என்று முறைப்படி கடிதம் கொடுக்க வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் கடன் திட்டமிட்ட காலத்திலேயே முடிவடைவதை உறுதி செய்யலாம். அதே சமயம், இந்தப் பதற்றத்திற்கு மத்தியிலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. வங்கிகளில் நிலையான வைப்பு நிதி எனப்படும் எஃப்டி (FD) சேமிப்பு வைத்துள்ளவர்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிஎஃப் மற்றும் அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களிலும் வட்டி வருவாய் உயர வாய்ப்புள்ளது. புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் இனி அதிகமாக இருக்கும் என்பதால், லோன் வாங்கத் திட்டமிடுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். ரிசர்வ் வங்கியின் இந்த நகர்வு, சந்தையில் பணப் புழக்கத்தைக் குறைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.
