பிரான்ஸ் நாட்டில், ஆசனவாயில் வெடிகுண்டு இருந்த நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 31-ம் தேதி இரவு, பிரான்ஸின் டூலோன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 24 வயதுடைய இளைஞர் ஒருவர் வந்தார். தனது ஆசனவாயில் ஒரு பொருளை நுழைத்துவிட்டதாகவும், அதை மீண்டும் வெளியே எடுக்க முடியவில்லை என்றும் அவர் டாக்டர்களிடம் தெரிவித்தார். அது என்ன பொருள் என்பதை பரிசோதித்த மருத்துவர்கள் சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக குழந்தைகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அவசரமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரது அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சையின் போது, முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 8 அங்குல நீளமான பீரங்கி குண்டு ஆசனவாயிற்குள் இருந்தது தெரியவந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
