முதல் தேர்தலிலேயே விஜய்க்கு பெரிய வெற்றி… சாதனை படைத்த த.வெ.க…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜய், வெறும் இரண்டு ஆண்டுகளில் தனது முதல் சட்டசபைத் தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தவெக மொத்தமாக 34.92 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

முழுப் பெரும்பான்மையை எட்டவில்லை என்றாலும், பிற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க உள்ளார். ஒரு புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பது இந்திய அரசியலில் அரிதான ஒன்று. அந்த வரிசையில் விஜய் தற்போது நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.

முன்னதாக, 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, 1977 தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு 155 தொகுதிகளில் 130 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அக்கட்சிக்கு 30.36 சதவீத வாக்குகள் கிடைத்தன.

அடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் என்.டி. ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, தொடங்கிய ஒன்பது மாதங்களிலேயே 1983 தேர்தலில் 289 தொகுதிகளில் போட்டியிட்டு 201 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 46.30 ஆகும்.

மூன்றாவதாக, ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அறியப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், 2012ல் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்று, 29.49 சதவீத வாக்குகளுடன் முதல்வரானார். இந்த வரிசையில் தற்போது விஜயும் இணைந்துள்ளார்.

Related News

Latest News