Tuesday, February 24, 2026

ஒரு லட்சம் வரை செல்லும் ஒரு கிராம் தங்கம்? ஷாக்கிங் கொடுத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஜனவரி இறுதியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17,000 வரை உயர்ந்தது. அதன் பின்னர் விலை சற்றுக் குறைந்ததால் மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தங்கம் தொடர்ந்து உயர்வு பாதையை எட்டியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு அமெரிக்காவின் வரி கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட வரி விதிப்பு நடவடிக்கைகள் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த சூழலில் பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தங்கம் குறித்து எச்சரிக்கை தகவலை பகிர்ந்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய போக்கு நீடித்தால் ஒரு கிராம் தங்கம் ரூ.1 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரது விளக்கப்படி, அமெரிக்கா வசூலித்த வரிகளை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்காக சுமார் 120 பில்லியன் டாலர் அளவிலான பணம் தேவைப்படும். திடீரென அதே மதிப்பில் தங்கம் சந்தையில் அதிகரிக்காது என்பதால், விலை மேலும் உயரும் அழுத்தம் உருவாகலாம் என்றார்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 25,000 டாலர் வரை உயரக்கூடும் என சில நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால் அது உடனடியாக நடைபெறாது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த அளவை எட்ட வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் தங்கம் 1,000 டாலரிலிருந்து 5,000 டாலர் வரை உயர்வதற்கு சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் எடுத்துள்ளது. அதைப் போலவே 25,000 டாலர் அளவை எட்ட 2035 வரை ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கம் 25,000 டாலராக இருந்தால், ஒரு கிராம் தங்கம் சுமார் 800 டாலராக இருக்கும். தற்போதைய ரூபாய் மதிப்பை கணக்கில் எடுத்தால், அது ரூ.60,000 அளவை எட்டலாம். மேலும், ரூபாய் மதிப்பு சரிவும் இணைந்தால், ஒரு கிராம் தங்கம் ரூ.1 லட்சம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் தங்க விலையை நீண்டகாலத்தில் பெரிதும் பாதிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

Latest News