டீக்கடை, Auto Stand என இரண்டு மூன்று பேர் கூடும் இடங்களில் தவிர்க்க முடியாத பேசுபொருளாகிவிட்டது தங்கம் விலை. ஏனெனில் தங்கம் விலை உயரும் வேகம் அப்படி. தற்போது ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 3053.39 டாலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை 3199.60 டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பது விழிபிதுங்க வைப்பதாக உள்ளது. இந்தியாவிலும் தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைந்து வருவதால் பாதுகாப்பான உண்மையான பணம் தங்கம்தான் என்றாகிவிட்டது. இதனால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே தேர்ந்தெடுக்கிறார்கள். தங்கத்தின் விலை தான் இப்படி ஒரு பக்கம் டிரெண்டாகிறது என்றால் இன்னொரு பக்கம் தங்க அட்டையும் டிரெண்டாகி வருகிறது.
அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்காவில் கடந்த வாரம் ஒரே நாளில் ஏறக்குறைய 1,000 ‘தங்க அட்டைகள்’ விற்கப்பட்டு தீர்ந்துள்ளன என்று அறிவித்திருப்பது உலகத்தின் தலைகளை திருப்பியுள்ளது. இது ஒவ்வொன்றும் 5 மில்லியன் டாலர் பெருமானமுள்ளது. டிரம்ப் கொண்டு வந்த இந்த திட்டம் அமெரிக்காவில் சூப்பர் Hit ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது. அது என்ன தங்க அட்டை என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதியின் அடிப்படியில் 5 மில்லியன் டாலர் கொடுத்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசாவை பெற்றுக்கொள்ளலாம். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா. அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கிரீன் கார்டு லைனில் காத்திருக்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற அப்படி லைனில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியர்களே அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. கோல்டு விசா இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் EB-5 விசாக்கள் மூலம் 1 மில்லியன் டாலர் செலவழித்தால் மட்டுமே நிரந்தர விசா கிடைக்கும். அதாவது EB-5 விசாக்கள் பெற 8 கோடி ரூபாய் கட்டினால் போதும். ஆனால் இப்போது புதிய விதி அமல்படுத்தப்படும் பட்சத்தில் 50 கோடி ரூபாய் வரை கட்ட வேண்டும்.
இதனால் இந்தியர்கள் இந்த விசாவை வாங்குவது கடினமாகிவிடும். ஏற்கனவே EB-5 விசாக்கள் வாங்க திட்டமிட்டவர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால் போக போக 5 மில்லியன் டாலர் மதிப்பு சரிந்து இந்தியர்கள் செலுத்த வேண்டிய தொகையின் இந்திய மதிப்பு தொடர்ந்து உயரும் என்பது கலக்கத்தையே கொடுக்கிறது.