ரஷ்யாவின் கம்சட்கா பகுதியை அதிரவிட்டது நேற்று நடந்த 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம். இது உலக நாடுகளை அச்சத்தில் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டது. இந்நிலநடுக்கம் கடலுக்கடியில் ஏற்பட்டதால், பசிபிக் வளைகுடா பகுதியில் 16 நாடுகளுக்கு திடீர் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த எச்சரிக்கை “நாமும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறோமா” என்று பல நாட்டினரையும் தற்போது நடுங்கவிட்டுள்ளது. குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள், கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்தது என்பதால், அதன் அதிர்வுகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டி உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டுமல்லாமல் இதன் தாக்கம், ஒரு கட்டத்தில் மெகா சுனாமி என்று சொல்லப்படும் ஆழி பேரலைகளாக உருவெடுக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியா பாதிக்கப்படுமா என்பது பெரும்பாலான இந்தியர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கான பதில் இல்லை என்பதே. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தற்போது இந்தியா பாதுகாப்பான நிலைமையிலேயே உள்ளது. காரணம், இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி பசிபிக் பிளேட் பகுதியில் அமைந்திருக்கிறது. ஆனால் இந்திய கடற்கரையின் பெரும்பகுதிகள் இந்திய-ஆஸ்திரேலிய பிளேட் பகுதியில் உள்ளன.
எனவே, இந்த நிலநடுக்கத்தால் நேரடி தாக்கம் ஏற்படும் சாத்தியம் குறைவு என்று கூறப்படுகிறது.
ஆனாலும், இதனை ஆரம்பகட்ட எச்சரிக்கையாகவும் பார்க்க வேண்டும். காரணம், கடற்கரை பகுதிகளில் வாழும் மக்களுக்கு இயற்கை பேரழிவுகள் என்பது எந்த நேரத்திலும் நிகழக்கூடியவை. எனவே, இந்தியா இப்போது பாதுகாப்பாக இருந்தாலும், இயற்கையோடு சமரசமின்றி வாழும் பழக்கத்தை நாம் உருவாக்க வேண்டியது மிக முக்கியம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.