தேனி மாவட்டம், தேனி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் தெருவில் பழக்கடை பாண்டி (72) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் தேனி பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து ரேஷன் கடைக்குச் செல்ல தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட முயன்றபோது, அடையாளம் தெரியாத சில நபர்கள் திடீரென அவரை அரிவாளால் வெட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் பாண்டிக்கு கழுத்துப் பகுதியில் கடுமையான வெட்டுக் காயம் ஏற்பட்டு, அதிக ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி காவல்துறையினர், உயிரிழந்த பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
