தினமும் இரண்டுமுறை என்று சில மணி நேரம் மட்டுமே போக்குவரத்துக்குப் பயன்படும் சாலை, பிறகு 13 அடி ஆழத்தில் நீருக்கடியில் மூழ்கிவிடுகிறது. இந்த அதிசயமான சாலை எங்குள்ளது தெரியுமா?
பிரான்ஸ் நாட்டின் அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள பேஸேஜ் டு கோயிஸ் அல்லது கோவா என்று அழைக்கப்படும் அந்த சாலை பியூவோயர் கர் மெர் மற்றும் நோயர்மூட்டியர் தீவுக்கிடையே உள்ள இயற்கையான தரைப்பாதை ஆகும்.
4 கிலோமீட்டருக்கும் சற்று அதிகமான நீளமுள்ள இந்த சாலையில் அலை வருவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பும், அலை வந்தபிறகு ஒன்றரை மணி நேரம் வரையும் மட்டுமே பயணிக்க முடியும். கடல் மட்டம் உயரும்போதும், அலைகள் எழும்பும்போதும் இந்த சாலை கடலுக்கடியில் மூழ்கிவிடும். தீவுக்குச் செல்ல ஒருவழிப்பாதைபோல மட்டுமே டிரக்குகள், பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றன.
16 ஆம் நூற்றாண்டிலேயே இயற்கையாக அமைந்துள்ளது இந்தப் பாதை. அப்போதுமுதலே இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலகப் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம் இரண்டுமுறை இந்த சாலை வழியாக நடைபெற்றுள்ளது. ஆனாலும், 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகே இந்த சாலை பிரபலமானது.
நோயர்மூட்டியர் தீவில் பத்தாயிரம்பேர் வசிக்கின்றனர். முன்பெல்லாம் அங்கு படகுமூலம்தான் செல்லமுடியும். அங்கு செல்வதற்காக முதன்முதலில் 1840 ஆம் ஆண்டில் சாலை அமைக்கப்பட்டது. அப்போது குதிரையிலும் கார்களிலும் டூவீலர்களிலும் இந்தப் பாதைவழியாகப் பயணிக்கத் தொடங்கினர்.
தற்போது சுற்றுலாப் பயணிகள் இந்தச் சாலையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், சில நேரங்களில் திடீரென்று எழும் அலைகளில் சிக்கி சிலர் மரணத்தைத் தழுவுகின்றனர்.
அத்தகைய ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, சாலை கடக்கத் தயாராக உள்ளதா என்பதை டிஜிட்டல் பேனர்கள்மூலம் தெரிவிக்கிறார்கள். அதில் அலை வரும் நேரங்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டுள்ளன.
அதனை நோயர்மூட்டியர் தீவு மக்கள் மதித்துப் பாதுகாப்பாக நடந்துகொள்கின்றனர். சில நேரங்களில் யாராவது கடல் அலையில் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற உயரமான கோபுரம் அமைத்துள்ளார்கள்.
தண்ணீர் குறையும்வரை அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக அந்தக் கோபுரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த அதிசயத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கானப் பார்வையாளர்கள் இந்தப் பகுதிக்கு சுற்றுலா வருகின்றனர்.