Thursday, September 4, 2025

டிரம்புக்கு விழுந்த மரண அடி! ஹார்வர்டுடன் மோதல்! நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தீர்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும், உலகின் நம்பர் 1 பல்கலைக்கழகமான ஹார்வர்டிற்கும் இடையே நடந்துகொண்டிருந்த பனிப்போரில், இப்போது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான 2.6 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆராய்ச்சி நிதியை முடக்கிய டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை, அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மோதலுக்குக் காரணம் என்ன?

டிரம்ப் நிர்வாகம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மீது இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகளை வைத்தது.
வளாகத்தில் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறிவிட்டது. தாராளவாதக் கருத்துக்களை அதிகமாக ஊக்குவிக்கிறது. இவற்றைக் காரணம் காட்டி, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி, டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டும்.தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை மற்றும் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். பன்முகத்தன்மை, சமத்துவம், மற்றும் உள்ளடக்கம் (DEI) தொடர்பான திட்டங்களை நிறுத்த வேண்டும். என்று பல கோரிக்கைகளை வைத்தது. ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஏப்ரல் 14-ஆம் தேதி, இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது.

இதற்குப் பிறகுதான், டிரம்ப் நிர்வாகம் தனது அதிரடி நடவடிக்கையை எடுத்தது. ஹார்வர்டு மறுத்த உடனேயே, டிரம்ப் நிர்வாகம், பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் டாலர் ஆராய்ச்சி நிதியை முடக்கியது. மேலும், ஹார்வர்டு இனி புதிய நிதியுதவிக்குத் தகுதியற்றது என்றும் அறிவித்தது. ஹார்வர்டுடனான பல ஒப்பந்தங்களையும் ரத்து செய்யத் தொடங்கியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலிசன் பரோஸ், டிரம்ப் நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். “யூத எதிர்ப்பு என்ற போர்வையில், அரசாங்கம் ஹார்வர்டின் நிதியைத் தவறாக நிறுத்தி வைத்துள்ளது. இது சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றத் தவறிய செயல்,” என்று அவர் கூறியுள்ளார்.

“ஆராய்ச்சி நிதியைச் சட்டவிரோதமாகத் தடுப்பதற்காக, யூத எதிர்ப்பு என்ற ஒரு தவறான கதையை டிரம்ப் நிர்வாகம் இட்டுக்கட்டியுள்ளது,” என்றும் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

இறுதியாக, ஹார்வர்டின் அனைத்து நிதியையும் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்ற எந்த நிதி வெட்டுகளையும் செய்யக் கூடாது என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஹார்வர்டின் பதில் என்ன?

ஹார்வர்டு தலைவர் ஆலன் கார்பர், “யூத எதிர்ப்புக்கு எதிராகப் போராட நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்ன கற்பிக்க வேண்டும், யாரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எந்த அரசாங்கமும் எங்களைக் கட்டாயப்படுத்த முடியாது,” என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் எதிர்வினை

வெள்ளை மாளிகை, இந்தத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளது. நீதிபதி பரோஸை, “ஒபாமாவால் நியமிக்கப்பட்ட ஆர்வலர் நீதிபதி,” என்று கண்டித்துள்ளதுடன், உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, கல்விச் சுதந்திரத்தின் ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News