Monday, February 2, 2026

கூட்டணிக் கட்சிகளுக்கு செக் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி வியூகம் – கழற்றிவிடப்படுமா காங்கிரஸ்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணியை உறுதி செய்துவருகிறது. தங்களது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை? அதேபோல், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்படுகிறது. திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்படும் குழு தங்களது பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குகிறது.

கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு புகைச்சல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் நிர்வாகிகளான ஜோதிமணி தொடங்கி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி வரை திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது எழுப்பிவந்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் போகவே முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி டெல்லி சென்று திமுக எம்.பி கனிமொழி ராகுல்காந்தியை சந்தித்தார். பின்னர் பேட்டியளித்த கனிமொழி திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், காங்கிரஸ் நிர்வாகிகளின் பேச்சு திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அதிரடி திட்டத்தை வகுத்திருக்கிறார். அதன்படி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதி என விரிவான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த எண்ணிக்கைக்குள் கூட்டணி கட்சிகளை எப்படியாவது அடக்கிவிட முதல்வர் ஸ்டாலின் டி ஆர் பாலு தலைமையிலான குழுவிடம் அறிவுறுத்தி இருக்கிறாராம். இந்த சூழ்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை தாங்கள் அதிக தொகுதிகளை கேட்கலாம் என முடிவு செய்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் வியூகம் வெல்லுமா? அல்லது கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகள் பலன் கொடுக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related News

Latest News