கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த யாதவ் என்ற 8 வயது சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தெருநாய் ஒன்று யாதவை பார்த்து குரைத்தபடி கடிப்பது போல ஓடி வந்தது. இதனால் பயந்து போன யாதவ் கால்வாயின் நடை பாதை வழியாக ஓடியுள்ளான். அப்போது கால் வழுக்கியதால் கால்வாயில் விழுந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு கால்வாயில் நிரப்புவிளை பகுதியில் இருந்து யாதவை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.