தமிழ்நாடு அரசின் புதிய உத்தரவின்படி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சொத்து வரி ஆண்டுக்கு 6 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வு 2025 – 2026 நிதியாண்டுக்கு அமலுக்கு வந்துவிட்டது.
ஆனால் பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி அறியாமலே வரி செலுத்த நேரிடுகிறது என்பதே முக்கிய பிரச்சனை. அரசாங்கம் இதை வெளிப்படையாக அறிவிக்காமல், நேரடியாகவே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது என்பதால்தான் மக்கள் குழப்பத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
2022ஆம் ஆண்டில் முதன்முதலாக சொத்து வரியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டதில் வீடுகளும் கடைகளும் 25% முதல் 100% வரை கூடுதல் வரி கட்ட வேண்டிய நிலை உருவானது. அதன்பின் 2023ல் வருடந்தோறும் 6% வரி உயர்த்த அதிகாரம் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது. அதைத்தான் இப்போது அனைத்து நகரங்களும் பயன்படுத்தி இருக்கின்றன.
சென்னையை எடுத்துக்கொண்டால், 600 சதுர அடிக்கு கீழ் உள்ள வீடுகளுக்கு 50% வரி உயர்ந்திருக்கிறது.
600 முதல் 1200 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு 75%-மும் ,
1201 முதல் 1800 சதுர அடி வரை 100%மும்,
அதற்கு மேலான வீடுகளுக்கு 150% வரி உயர்வும் விதிக்கப்பட்டிருக்கிறது!
2011ஆம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இது குறைவாக, 25% உயர்வு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த எல்லா உயர்வுகளும் சொத்தின் அளவையும், அந்த பகுதியில் வருமான வாய்ப்பும் பார்த்து தான் விதிக்கப்பட்டிருப்பதாக அரசு விளக்கம் அளிக்கிறது.
ஆனாலும், இதுபோல ஒவ்வொரு வருடமும் 6% வரி உயர்ந்தால், 5 ஆண்டுகளில் 30% – 10 ஆண்டுகளில் பல மடங்காக உயர்ந்துவிடும். இதனால் வரி கட்டும் மக்களுக்கு நிதிசுமை நாளடைவில் அதிகமாகிக்கொண்டே போகும் என்பதுதான் உண்மை.