Wednesday, December 17, 2025

நெல்லை அருகே மர்மக் காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி பலி

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடை, போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி கருத்தம்மாள். இத்தம்பதிக்கு பட்டு (15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். பட்டு அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மாணவி பட்டு உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து மர்மக் காய்ச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் உள்ளூரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை மாணவியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

பதறிப்போன மாணவியின் தாய் கருத்தம்மாள் மற்றும் உறவினர்கள், மாணவியை உடனடியாக மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவி பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மாணவியின் திடீர் மரணம் குறித்து சீவலப்பேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீவலப்பேரி போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவிக்கு என்ன வகையான காய்ச்சல் தாக்கியது, முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்தும், மரணத்திற்கான முழுமையான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி மர்மக் காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பாலாமடை கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News