மத்திய அரசின் ₹90,000 கோடி கிப்ட்! முதலமைச்சர் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!

மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு ஒரு மிகப்பெரிய பொருளாதார ‘குட் நியூஸ்’ வெளியாகியுள்ளது. 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே, மாநிலங்களுக்குச் சுமார் 90,000 கோடி ரூபாய் வட்டி இல்லா கடனை வழங்க மத்திய அரசு அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

மேற்கு ஆசியப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சூழல்கள் காரணமாக ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொய்வின்றித் தொடரவும் இந்த மெகா நிதி விடுவிக்கப்பட உள்ளது. ‘மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவி’ என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 45 சதவீதத் தொகையை முதல் காலாண்டிலேயே வழங்கி, மாநிலங்களின் உள்கட்டமைப்புப் பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். இத்தகைய சூழலில், மத்திய அரசு வழங்கும் இந்த வட்டி இல்லா கடன் தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

இந்த நிதியானது குறிப்பாக நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் பணிகள், மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற மிக முக்கியமான வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. கடந்த நிதியாண்டில் மாநிலங்கள் இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு நிதியளவு மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி காட்டும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் சுமார் 75,000 கோடி ரூபாய் எந்தவித நிபந்தனைகளும் இன்றி மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் 66 சதவீதத் தொகை முதல் தவணையாகவே மாநிலங்களின் கைகளுக்கு வந்து சேரும். இது தவிர, மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்கும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமிர்த் (AMRUT), ஜல் ஜீவன் மிஷன் போன்ற குடிநீர் திட்டங்களுக்கும், கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் இந்த நிதி ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும்.

தற்போது முதலமைச்சர் விஜய் தனது 2,500 ரூபாய் மகளிர் உதவித் தொகை மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதில் இந்த வட்டி இல்லா கடன் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.

டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே சுமூகமான உறவை விரும்புவதாக ஏற்கனவே விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த நிதி விடுவிப்பு தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையைச் சீரமைக்க ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சியை நிலைநிறுத்த மத்திய அரசு எடுத்துள்ள இந்த ‘முன்கூட்டிய நிதி விடுவிப்பு’ நடவடிக்கை, ஒட்டுமொத்த தேசத்தின் கட்டுமானத்தையே மாற்றப்போகும் ஒரு புதிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.

Related News

Latest News