கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட அலுவலருக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் தகடி கிராமத்தில், காலை உணவுத் திட்டப் பணியாளரை நியமிப்பது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் லலிதாவிடம் தொலைபேசியில் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் லலிதா தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 15-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் லலிதா புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அக்டோபர் 17-ம் தேதி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளார். அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மிரட்டல் புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வசந்தம் கார்த்திகேயன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவரைக் கைது செய்ய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முன்ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
