‘உண்மை இது தான்..!!’ ஆஸ்திரேலிய அணியின் முகத்திரையைக் கிழித்த ‘ஏபி டி வில்லியர்ஸ்’!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாகப் பதிவான 2018-ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் இப்போது ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

அந்தத் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பந்தைச் சேதப்படுத்தும் சதித்திட்டம் குறித்துத் தெரிந்திருந்தது என்பதில் தனக்குத் துளியும் சந்தேகமில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் இப்போது 2026-ல் மீண்டும் பூதாகரமாக வெடிக்கக் காரணம், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா வெளியிட்ட ‘சப்ர்'(Sabr: Finding My Way in Cricket and Life)என்ற சுயசரிதைப் புத்தகம்தான்.

உப்புத்தாள் பயன்படுத்தியது அணியில் இருந்த அனைவருக்குமே தெரியும் எனக் கவாஜா கூறியதை, தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ் முற்றிலும் அபத்தமானது என மறுத்திருந்தார்.

ஆனால், அன்று கேமராவில் கையும் களவுமாகச் சிக்கிய கேமரூன் பான்கிராஃப்ட், நான்காயிரம் வார்த்தைகள் கொண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டுப் பந்துவீச்சாளர்களின் வாதத்தை உடைத்தார்.

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் தேநீர் இடைவேளையின் போதே, பயிற்சியாளர்கள் டேரன் லீமன் மற்றும் டேவிட் சேக்கர் முன்னிலையில் டேவிட் வார்னர் உப்புத்தாள் பயன்படுத்தும் யோசனையைக் கூறியதாக பான்கிராஃப்ட் (Cameron Bancroft) புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

இந்தச் சர்ச்சை குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஏபி டி வில்லியர்ஸ், சர்ச்சைக்குரிய கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஜா இப்போது புத்தகம் வெளியிட்ட நேரம் சற்று விசித்திரமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது தனக்குத் தனிப்பட்ட முறையில் அனுதாபம் உள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், அன்று களத்தில் நடந்த தவற்றை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது எனக் கூறியுள்ள அவர், கேப்டவுன் மற்றும் போர்ட் எலிசபெத் போட்டிகளில் மட்டுமல்ல, டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயும் பந்து சேதப்படுத்தப்பட்டது எனப் புதுத் தகவலை வெளியிட்டுள்ளார். பழைய வீடியோ காட்சிகளைப் பார்த்தாலே அந்த உண்மை தெளிவாகத் தெரியும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

எல்லோரும் உப்புத்தாள் பயன்படுத்தியது உங்களுக்குத் தெரியுமா என்று மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதை டி வில்லியர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். பந்தைச் சேதப்படுத்த எந்தப் பொருளைப் பயன்படுத்தினார்கள் என்பதை விட, விதிகளை மீறி ஒரு சட்டவிரோதச் செயலைச் செய்யப் போகிறோம் என்ற முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முடிவுதான் இங்கு முக்கியப் பிரச்சனை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லையைத் தாண்டித் தவறு செய்யப் போகிறோம் என்பது அன்று களத்தில் இருந்த ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரருக்கும் நன்றாகவே தெரியும் என்றும், இதில் தனக்குப் பூஜ்ஜியம் சதவீதம் கூட சந்தேகமில்லை என்றும் டி வில்லியர்ஸ் அடித்துக் கூறியிருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News