தங்கத்தின் எடையை அதிகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட ரீனியம் பவுடரைத் தங்கத்துடன் கலந்து மோசடி செய்வது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தங்க நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், அதை வைத்து பல்வேறு வகைகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தங்கத்துடன் மற்ற உலோகங்களைக் கலந்து போலி நகைகள் தயாரித்து விற்பனை செய்வது ஏற்கெனவே புகாராக இருந்து வருகிறது.
இந்நிலையில், தங்கத்துடன் ரீனியம் என்ற உலோகப் பொடியைக் கலந்து அதன் எடையை அதிகரிக்கும் புதிய வகை மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரீனியம் என்பது அதிக வெப்பத்தையும், தேய்மானத்தையும் தாங்கக்கூடிய அரிய வகை உலோகம். இது பொதுவாக விண்வெளி இயந்திரங்கள் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் உலோகக் கலவைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த உலோகத்தின் தன்மையைப் பயன்படுத்தி, மோசடி கும்பல் தங்கத்துடன் ரீனியம் பவுடரைக் கலந்து நகைகளைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற நகைகளில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிவது சவாலானதாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் தயாரிக்கப்படும் ரீனியம் பவுடர், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா வழியாகக் கொண்டு வரப்பட்டு இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தப் புதிய வகை மோசடி குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தங்க நகைகளின் தரம் மற்றும் தூய்மை குறித்து வியாபாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்க நகைகளை வாங்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
