தனுஷின் O.M படத்திற்கு கடைசி நேரத்தில் சிக்கல்..என்ன காரணம்?

நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘O.M’ திரைப்படம், தமிழகத்தின் சில திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வருவாய் பங்கீடு தொடர்பான பிரச்சினையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை நடிகர் தனுஷே தயாரித்துள்ளார். சந்தனக் கட்டை கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் வரும் நவம்பர் 20ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்தச் சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனித்திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ள ஏ.ஜி.எஸ் நிறுவனம், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு 80 சதவீத வருவாயையும், திரையரங்குகளுக்கு 20 சதவீதத்தையும் வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தனித்திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் பங்கீட்டு விகிதத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அந்தத் திரையரங்குகளில் படத்தைத் திரையிட வேண்டாம் என உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படம் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண விநியோக நிறுவனத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related News

Latest News