இல்லத்தரசிகளுக்கு சூப்பர் செய்தி… ஜனவரி முதல் அரிசி விலை குறைய வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காய்கறி, மளிகைப் பொருட்கள் விலை உயர்வுடன் அரிசி விலையும் அதிகரித்திருப்பது குடும்ப பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் சன்ன ரக அரிசி மூட்டைக்கு ரூ.800 வரையும், மோட்டா ரக அரிசி மூட்டைக்கு ரூ.600 வரையும் விலை உயர்ந்துள்ளது. போதிய விளைச்சல் இல்லாதது மற்றும் நெல் வரத்து பாதியாகக் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தமிழக அரசு அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட 250 விற்பனை மையங்களில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசியை விற்பனை செய்து வருகிறது. மேலும், பொன்னி புழுங்கல் அரிசி ரூ.60-க்கும், பச்சரிசி ரூ.46-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நெல் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதாக அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் கோபி தெரிவித்துள்ளார்.

விலை உயர்வால் அரிசி வாங்குவதைக் குறைத்துள்ள மக்கள், ரேஷன் அரிசியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்பு 26 கிலோ மூட்டை வாங்கியவர்கள் தற்போது 10 கிலோ மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஜனவரியில் அரிசி விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது.

Related News

Latest News