தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து அர்னாப், முரசு ஆகிய இரண்டு புயல்கள் உருவாகி ஆந்திரா நோக்கி நகர்ந்தன. இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு அக்வான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் 17ஆம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெறலாம் என வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது கணிப்பின்படி, 19ஆம் தேதி இரவு முதல் 20ஆம் தேதி காலை வரை புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, கடலூர் உள்ளிட்ட வடதமிழகக் கடலோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு கரையைக் கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புயலால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் தீவிர மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவை தனிப்பட்ட வானிலை ஆய்வாளரின் கணிப்புகளே தவிர அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பு அல்ல. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்.
