சென்னையில் இன்று மழை வெளுக்குமா? வானிலை மையம் சொன்ன தகவல்..

சென்னை உள்ளிட்ட வட கடலோர தமிழகப் பகுதிகளில் இன்று (நவம்பர் 13) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மலைப்பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நவம்பர் 17-ல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா எச்சரித்துள்ளார். மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாகக் கரை திரும்பவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

Latest News