வங்கியில் ரூ.70 லட்சம் இருந்தும் ஒரு ரூபாய் கூட எடுக்காமல் உயிரிழந்த நபர்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!

எதிர்காலத் தேவைக்காகப் பணத்தைச் சேமித்து வைப்பது ஒரு நல்ல பழக்கம்தான். ஆனால், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கூட அந்தப் பணத்தை எடுக்காமல், லட்சாதிபதியாக வாழ்ந்து ஏழையாகவே உயிரிழந்த ஒரு நபரின் விசித்திரமான கதைதான் இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த தீரஜ் குமார் என்பவருக்கு, அவரது தந்தை மறைந்த பிறகு கடந்த 2012-ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைத்தது.

மாவட்ட தொழுநோய் சிகிச்சைப் பிரிவில் துப்புரவுப் பணியாளராகப் பணியில் சேர்ந்த இவர், அடுத்த பத்து ஆண்டுகளில் தனது சம்பளப் பணத்தில் இருந்து ஒரு ரூபாயைக் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்.

மாதம் பிறந்தால் வங்கிக் கணக்கில் விழும் சம்பளத்தை அப்படியே விட்டுவிட்டு, தனது அன்றாடச் செலவுகளுக்குத் தாயின் ஓய்வூதியப் பணத்தையே இவர் முழுமையாக நம்பியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், சக ஊழியர்களின் உதவியிலும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் தனது வாழ்க்கையை நகர்த்தி வந்திருக்கிறார்.

ஒருவேளை திருமணம் செய்துகொண்டால், வரப்போகும் மனைவி தான் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைப் பறித்துக்கொள்வாரோ என்ற விசித்திரமான பயத்திலேயே, திருமணத்தையும் தவிர்த்துவிட்டுப் பணத்தை மட்டுமே குறியாகச் சேர்த்து வந்துள்ளார்.

இப்படிப் பத்து ஆண்டுகளாகச் செலவே செய்யாமல் சேர்த்த பணம், அவரது வங்கிக் கணக்கில் சுமார் 70 லட்சம் ரூபாயாகப் பெருகி நின்றது.

வங்கியில் 70 லட்சம் ரூபாய் இருப்பு இருந்தும், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீரஜ் குமாருக்குக் காசநோய் பாதிப்பு தீவிரமானபோதுதான் விதி விளையாடியது.

உயிருக்குப் போராடிய நிலையிலும், மருத்துவச் செலவிற்காகத் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

ஆபத்துக் காலத்தில் உதவும் எனச் சேர்த்து வைத்த பணத்தை, தன் உயிரைக் காப்பாற்றக்கூடப் பயன்படுத்த மனம் இல்லாமல், போதிய சிகிச்சையின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மனிதன் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்குத்தான் பணம் தேவைப்படுகிறதே தவிர, பணத்தைக் கட்டி அழுவதற்காக வாழ்க்கை அல்ல என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

மற்றவர்களின் தயவில் வாழ்ந்து, கடைசியில் உயிரைக் காக்கும் மருத்துவத்திற்குக் கூடச் செலவு செய்யாமல் தீரஜ் குமார் சேர்த்து வைத்த அந்த 70 லட்சம் ரூபாய், இன்று அவரின் உயிரையே காப்பாற்ற முடியாமல் போனதுதான் இதில் மிகப்பெரிய சோகம்.

Related News

Latest News