ஆந்திராவையே உலுக்கிய சோகம்.. இளம் மருத்துவர் திடீர் மரணம்! யார் இந்த லாவண்யா?

மருத்துவம் என்பதைப் பலரும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ஒரு வர்த்தகமாகப் பார்க்கும் இந்தக் காலத்தில், கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஏழை எளிய மக்களுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த இளம் பெண் மருத்துவர் ஒருவரின் திடீர் மரணம், ஆந்திர மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெல்லூரைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையின் தலைவரான டாக்டர் நாகேந்திர பிரசாத் மற்றும் லட்சுமி தம்பதியின் மகளான இளம் நரம்பியல் நிபுணர் டாக்டர் லாவண்யா தான், இப்போது மக்களின் கண்ணீருக்குக் காரணமாகியுள்ளார்.

படிப்பில் மிகத் தீவிர ஆர்வம் கொண்ட லாவண்யா, கடந்த 2016-ஆம் ஆண்டு நெல்லூரில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, பெங்களூருவில் பொது மருத்துவமும், தொடர்ந்து சென்னையில் நரம்பியல் துறையில் உயர் படிப்பும் பயின்று தங்கப் பதக்கம் வென்றவர்.

நெல்லூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும், தனது தந்தையின் மருத்துவமனையில் இயக்குநராகவும் பணியாற்றி வந்த இவர், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் நரம்பியல் சிகிச்சைகளை வழங்கி வந்தார்.

அதுமட்டுமல்லாமல், கிராமப்புறங்களுக்கு நேரில் சென்று இலவச மருத்துவ முகாம்களை நடத்திப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காத்ததோடு, சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து மருத்துவ விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இப்படிச் சுறுசுறுப்பாக இயங்கி வந்த டாக்டர் லாவண்யாவுக்கு, கடந்த 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மயஸ்தீனியா கிரேவிஸ் (Myasthenia Gravis – MG) எனப்படும் அரிய வகை நரம்பியல் நோய் தாக்கியது.

இதனால் திடீரெனத் தனது பேசும் திறனை முழுமையாக இழந்த அவர், எழுந்து நிற்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தக் கொடிய நோயிலிருந்து மீண்டு வந்த அவரை, பல மாதங்கள் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், தனக்கு வந்த இந்த நோய் மற்றவர்களுக்கும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி வெறும் நான்கே மாதங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பித் தனது மருத்துவச் சேவையைத் தொடர்ந்தார்.

வழக்கம்போல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த லாவண்யா, திடீரென உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மூளைப் பக்கவாதம் ஏற்பட்டதா அல்லது மாரடைப்பு வந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்த அரிய வகை நோய் குறித்து விளக்கும் மருத்துவர்கள், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நமது நரம்பு மண்டலத்திற்கு எதிராகத் திரும்புவதுதான் இந்த ‘ஆட்டோ இம்யூன்’ நோய் என்கின்றனர். இதனால் கண் இமைகள் தானாகவே கீழே தொங்கிப் போவது முதல், சுவாசத் தசைகள் செயலிழந்து மூச்சுத் திணறல் ஏற்படுவது வரை உயிருக்கு ஆபத்தான விளைவுகள் உண்டாகும். இதற்காகக் கடந்த ஜனவரி மாதம் அவரது நெஞ்சுப் பகுதியில் உள்ள தைமஸ் சுரப்பியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நீண்ட கால ஓய்வு தேவைப்பட்ட நிலையில், அவர் போதிய ஓய்வின்றித் தொடர்ந்து கிராமப்புறச் சேவைகளில் ஈடுபட்டதால் ஏற்பட்ட உடல் மற்றும் மன அழுத்தமே இந்தத் திடீர் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மறைந்த டாக்டர் லாவண்யாவின் தந்தை பெரிய மருத்துவமனை அதிபர், அவரது கணவரும் ஒரு பிரபல இதயவியல் நிபுணர், எல்லாவற்றிற்கும் மேலாக லாவண்யாவே தங்கப் பதக்கம் வென்ற ஒரு நரம்பியல் மருத்துவர்.

இத்தனை மருத்துவப் பின்புலம் இருந்தும், அதே நரம்பியல் பிரச்சனையால் மிக இளம் வயதில் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதுதான் இதில் மிகப்பெரிய சோகம்.

ஏழை மக்களின் நலனுக்காகத் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் உழைத்த இந்த இளம் மருத்துவரின் மறைவு, நெல்லூர் மக்களிடையே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக மாறியுள்ளது.

Related News

Latest News