வங்கி மூலமாகவும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வழியாகவும் பணம் அனுப்பும் வழக்கம் நம் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாக மாறிவிட்டது.
இந்த நிலையில், உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகள், குறிப்பாக ரொக்க அடிப்படையிலான நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கி மோசடிகளைத் தடுக்கவும், முறைகேடான பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பணப் பரிவர்த்தனைகளுக்குப் புதிய உச்சவரம்பையும், மிகக் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளையும் விதித்து ரிசர்வ் வங்கி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலின்படி, உள்நாட்டு பணப் பரிமாற்ற சேவைகள் மூலம் ஒருமுறைக்கு அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும்.
அதேபோல், ஒரு குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு மாதத்தில் மொத்தமாக இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்ப முடியாது என்ற மாதாந்திர வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிப் பிரதிநிதிகளான பிசினஸ் கரஸ்பாண்டன்ட்கள் மற்றும் ஏடிஎம்கள் வழியாக ஒருவரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச வரம்பு ஐந்தாயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது;
இதிலும் ஒரு நபர் மாதத்திற்கு அதிகபட்சமாக இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப இயலும். அதேநேரத்தில், நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று ‘கேஷ் பே-இன்’ முறையில் நெஃப்ட் (NEFT) வழியாகப் பணம் செலுத்தினால், அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரம்புகளோடு மட்டும் நின்றுவிடாமல், கேஒய்சி (KYC) மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் ரிசர்வ் வங்கி மிகக் கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, ரொக்கமாகப் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், சரிபார்க்கப்பட்ட மொபைல் எண் மற்றும் சுயமாகச் சான்றளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்கி வங்கிகளில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் கூடுதல் பாதுகாப்பு அங்கீகார முறை உறுதி செய்யப்பட வேண்டும்.
இதுமட்டுமின்றி, ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் நெஃப்ட் (NEFT) பரிவர்த்தனைகளில் பணம் அனுப்புபவரின் முழு விவரங்களையும், இது ரொக்கப் பரிவர்த்தனை என்பதற்கான பிரத்யேகக் குறியீட்டையும் வங்கிகள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கிற்கு வழக்கத்திற்கு மாறாகத் திடீரென அதிகளவில் நிதி வரவு வைக்கப்பட்டால், வங்கிகள் அதனைத் தீவிரமாகக் கண்காணித்துச் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் வங்கிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கவும், நிதி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பைத் தருமா அல்லது சிரமத்தை ஏற்படுத்துமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
