ஜியோ,BSNL-ஐ கதறவிட்ட ‘Airtel’! இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் எது தெரியுமா?

வீடுகளில் பயன்படுத்தப்படும் பிராட்பேண்ட் மற்றும் வைஃபை இணையச் சேவையில் ஜியோ சிறந்ததா அல்லது ஏர்டெல் சிறந்ததா என்ற போட்டி எப்போதுமே மக்களிடம் உண்டு.

இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, ‘ஓப்பன் சிக்னல்’ நிறுவனம் இந்தியாவின் பிராட்பேண்ட் சேவை குறித்த தனது சமீபத்திய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

இணையத்தின் வேகம், தடையற்ற தரம், நம்பகத்தன்மை, பதிவிறக்கம் மற்றும் வீடியோ அனுபவம் என அனைத்து ஐந்து பிரிவுகளிலுமே ஏர்டெல் நிறுவனம் தான் முழுமையான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தின் நம்பகத்தன்மைக்கான ஆயிரம் புள்ளிகள் கொண்ட பட்டியலில், ஏர்டெல் நிறுவனம் 486 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், ஜியோ 423 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த இணைய வேகத்தைப் பொறுத்தவரை ஜியோவை விட ஏர்டெல் சுமார் 26 முதல் 27 சதவீதம் வரை கூடுதல் வேகத்தைக் கொடுத்துள்ளது. இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இணைய வேகத்தில் ஜியோவையே முந்திக்கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏர்டெல்லின் டவுன்லோடு வேகத்தை விட வெறும் 0.5 எம்பிபிஎஸ் மட்டுமே குறைவாகவும், அப்லோடு வேகத்தில் 0.8 எம்பிபிஎஸ் மட்டுமே பின்தங்கியும் பிஎஸ்என்எல் கடும் போட்டியைக் கொடுத்துள்ளது.

கேபிள் இணைப்பு இல்லாத வயர்லெஸ் ஹோம் இன்டர்நெட் எனப்படும் ‘FWA’ பிரிவிலும் ஏர்டெல் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தப் பிரிவில் ஏர்டெல்லின் சராசரி டவுன்லோடு வேகம் 32.4 எம்பிபிஎஸ் ஆகவும், அப்லோடு வேகம் 20.7 எம்பிபிஎஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஆனால் ஜியோ நிறுவனமோ 25.7 எம்பிபிஎஸ் டவுன்லோடு வேகத்தையும், 17.1 எம்பிபிஎஸ் அப்லோடு வேகத்தையும் மட்டுமே வழங்கியுள்ளது. அதேபோல வயர்லெஸ் இணையத்தின் தரப் பரிசோதனையில் ஏர்டெல் 66.2 சதவீத வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ஜியோ 55 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள ஆகஸ்ட் 2026 தரவுகளின்படி, இந்தியாவில் வயர்டு பிராட்பேண்ட் பிரிவில் 1 கோடியே 48 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஜியோ தான் முதலிடத்தில் உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 1 கோடியே 14 லட்சம் வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், பிஎஸ்என்எல் 46 லட்சம் வாடிக்கையாளர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலையில் இருந்தாலும், இணையத்தின் வேகம் மற்றும் தடையற்ற சேவையில் ஏர்டெல் நிறுவனமே இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

Related News

Latest News