டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு? விஜய் அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வந்த 4,775 கடைகளில் 717 கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது 4,048 கடைகள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தினமும் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

தற்போது ஆண்டுக்கு திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிகைக் காலங்களில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த தீபாவளியின்போது நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.

இதற்கிடையே, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆளுநர் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், டாஸ்மாக் விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Related News

Latest News