‘ஒரு பைசா கிடையாது!’… ஈரானுக்கு பேரிடியை இறக்கிய ‘அமெரிக்கா’!

ஈரான் மீதான நேரடி ராணுவத் தாக்குதல்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கையோடு, இனி ஈரானைப் பொருளாதார ரீதியாக முற்றிலும் முடக்கும் புதிய வியூகத்தை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது.

பாரிஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் போட அமெரிக்கா தயாராக இருந்தாலும், ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகள் மிகவும் அபத்தமானவை என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இனி பெரிய அளவில் ராணுவத் தாக்குதல்களை நடத்தத் தேவையில்லை என்றும், கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல்வழி முற்றுகை மூலமாகவே ஈரானின் ஆட்சியை மூச்சுத்திணற வைக்கப் போவதாகவும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக, போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா கட்டுக்கட்டாகப் பணத்தை நஷ்டஈடாகத் தர வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை ரூபியோ அடியோடு நிராகரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமைதியைக் குலைத்ததற்காக ஈரான்தான் நஷ்டஈடு தர வேண்டுமே தவிர, அமெரிக்கா ஒரு பைசா கூட கொடுக்காது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடலில் எஞ்சியிருக்கும் ஒருசில கச்சா எண்ணெய் பீப்பாய்களும் காலியான பிறகு, ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் வருமானமும் வற்றிவிடும் என்றும், சாப்பிடுவதற்கும் தங்களின் ராணுவ வீரர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கும் கூட வழியில்லாமல் போகும்போது, ஈரான் தானாகவே வழிக்கு வரும் என்றும் ரூபியோ மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் இந்தப் பேச்சுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மைக் பாம்பியோ பேசிய அதே மனிதாபிமானமற்ற வார்த்தைகளைத்தான் இப்போது ரூபியோவும் திரும்பப் பேசுகிறார் என்றும், அமெரிக்காவின் இந்தப் பகல்கனவுகள்தான் அவர்களின் தொடர் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் போரைத் தடுக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் சூழலில், தங்களின் நிபந்தனைகளை ஏற்றால் இரண்டே நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தயார் என ஈரான் கூறியுள்ளது. நேரடிப் போர் சற்று ஓய்ந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பொருளாதார யுத்தம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News