தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. EPFO அமைப்பின் 240-வது மத்திய அறங்காவலர் குழுக் கூட்டம் வரும் நவம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000-ஐ ரூ.3,000 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் EPS-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவே இருந்து வருகிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாத இந்தத் தொகை, தற்போதைய விலைவாசி உயர்வுக்கு போதுமானதாக இல்லை என ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்துவதுடன், அகவிலைப்படியும் வழங்க வேண்டும் என ஓய்வூதியதாரர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், ரூ.3,000 உயர்வு தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்படலாம் என்ற தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், புதிய EPS-2026 திட்டத்தின் கீழ் முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் ஓய்வூதியக் கோரிக்கைகளை 20 நாட்களுக்குள் முடிக்கவும், உரிய காரணமின்றி தாமதம் ஏற்பட்டால் ஆண்டுக்கு 12 சதவீத வட்டி வழங்கவும் ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
EPFO திட்டத்தில் ஓய்வூதியம் கணக்கிடும்போது, ஊழியரின் ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் மற்றும் பணிக்காலம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக EPS ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் அவசியம்.
இருப்பினும், ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்துவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும். எனவே, தனியார் நிறுவன ஓய்வூதியதாரர்கள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
