தமிழ்நாட்டை குறிவைக்கும் இரட்டை காற்றழுத்தங்கள்?

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 14ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று (நவம்பர் 10) ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கடலோரப் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். நாளை (நவம்பர் 11) சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12ஆம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், 13ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 14ஆம் தேதி வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 15ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News