லண்டனில் படிப்பு… புனேவில் மர்ம மரணம்!! இளம்பெண் சடலமாக மீட்பு!! பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த 34 வயதான முக்தா தேஷ்முக், லண்டனில் எம்பிஏ படிப்பதற்காகச் சென்ற நிலையில், புனேவில் உள்ள வாடகைக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்தா கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு படிப்புடன் பகுதி நேர வேலையும் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் இந்தியா திரும்பிய அவர், புனேவின் கஹுன்ஜே பகுதியில் உள்ள லோதா பெல்மொண்டோ குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அக்டோபர் 24-ஆம் தேதி முக்தாவின் பெற்றோர் அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், லண்டனில் உள்ள அவரது தோழியிடம் விசாரித்தனர். அவர் அக்டோபர் 22-ஆம் தேதிதான் கடைசியாக முக்தாவிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து லண்டன் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், முக்தா ஏற்கனவே இந்தியா திரும்பியது தெரியவந்தது. அவரது வங்கிக் கணக்கைப் பரிசோதித்த தந்தை, அக்டோபர் 8 முதல் 25-ஆம் தேதி வரை பல்வேறு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதைக் கண்டறிந்தார். இதன் மூலம் அவர் இந்தியாவில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், புனேவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பைக் கண்டறிந்து, பூட்டு பழுதுபார்ப்பவரின் உதவியுடன் வீட்டைத் திறந்தனர். அப்போது முக்தா சடலமாகக் கிடந்துள்ளார்.

அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை. மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்பத்தினருக்குத் தெரியாமல் இந்தியா திரும்பியதற்கான காரணம் மற்றும் மரணத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News