நாசாவின் ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிகள், பூனையின் தலையைப் போன்ற தோற்றமுடைய நட்சத்திர உருவாக்கப் பகுதியின் நுணுக்கமான படங்களைப் பதிவு செய்துள்ளன. பூமியிலிருந்து சுமார் 7,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கரினா நெபுலா பகுதியில் இந்த அமைப்பு அமைந்துள்ளது.
பூனைத் தலை நெபுலா என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி, பின்னால் திரும்பி அமர்ந்து தலையை வலதுபுறம் திருப்பிப் பார்க்கும் பூனையைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.
நெபுலா உருவான விதம்;
அதாவது, கரினா நெபுலாவில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் வலிமையான புறஊதாக் கதிர்வீச்சு மற்றும் நட்சத்திரக் காற்றுகள் காரணமாக இந்த அமைப்பு உருவாகியிருக்கலாம். இவை சுற்றியுள்ள வாயு மற்றும் தூசுப் பொருட்களைப் படிப்படியாக அகற்றுகின்றன. இருப்பினும், அதிக அடர்த்தி கொண்ட பகுதிகள் இந்தத் தாக்கத்தைச் சில காலம் எதிர்த்துத் தாக்குப்பிடிக்கின்றன.
ஹப்பிள் தொலைநோக்கியின் பார்வை;
ஹப்பிள் எடுத்துள்ள படத்தில் அடர் பழுப்பு நிறத் தூசுத் தூணும், பூனையின் கண் போன்ற சிவப்பு நிற ஒளிரும் பகுதியும் காணப்படுகின்றன. இது தூசால் ஓரளவு மறைக்கப்பட்ட இளம் நட்சத்திரமாக இருக்கலாம். நீலம், சியான், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் வாயு, தூசு மற்றும் நட்சத்திர ஒளியின் வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துகின்றன.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பார்வை;
வெப் தொலைநோக்கியின் அருககச்சிவப்பு மற்றும் மத்திய அகச்சிவப்பு படங்கள், தூசு மேகங்களுக்குள் மறைந்துள்ள நுணுக்கமான அமைப்புகளை வெளிப்படுத்துகின்றன. இளம் நட்சத்திரங்கள், சிறிய உருண்டை வடிவ அமைப்புகள், மெல்லிய வாயு இழைகள் மற்றும் பின்னணியில் உள்ள மங்கலான விண்மீன் திரள்களையும் இதில் காண முடிகிறது.
நட்சத்திர உருவாக்கம் குறித்த ஆய்வு;
அதாவது, ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளின் வெவ்வேறு பார்வைகள் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்துள்ளன. இவற்றின் மூலம் நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன, அவற்றின் கதிர்வீச்சு சுற்றியுள்ள வாயு மற்றும் தூசு மேகங்களை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை வானியலாளர்கள் ஆழமாக ஆராய முடிகிறது.
