தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக். 30: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
அக். 31: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவ. 1: வடகடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
இதற்கிடையே, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40-65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
