தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியப் பங்காற்றும் தொழிலாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையை அங்கீகரிக்கும் வகையில், 2025–26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது.
உற்பத்தி, வாகன உற்பத்தி, பொறியியல், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் திறமையான மனிதவளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019-ன்படி, மிகை ஊதியம் பெறுவதற்கான மாதச் சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆகவும், மிகை ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான மாதச் சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த உச்சவரம்புகளைத் தளர்த்தி, அனைத்து ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2025–26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்நடவடிக்கை தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதுடன், அவர்களின் பணித்திறன், மனநிறைவு மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் அரசின் முயற்சியாகும்.
