ஆவின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி.. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பனீர், வெண்ணெய், நெய், குக்கீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தில் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை முகவர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்னையில் சுமார் 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.1 சாக்லேட் மற்றும் பால் ரஸ்க் ஆகியவற்றுக்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. எனவே, ஆவின் பால் பொருட்கள் தடையின்றி தொடர்ந்து விநியோகிக்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Related News

Latest News